மங்கள்யான் செயலிழந்தது…! இஸ்ரோ அறிவிப்பு…

ஸ்ரீஹரிகோட்டா:  செவ்வாய்க்கோளை ஆய்வு செய்வதற்கான அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கை கோள் கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய் கோளை சுற்றி வந்த நிலையில், அது செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2013 நவம்பர் 5-ம் தேதி  சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்வதற்காக பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்த மங்கள்யான், அதனைச் சுற்றி வந்தது. இந்த விண்கலம்  6 மாதங்களுக்கு மட்டுமே  செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலையில், சுமார்  8 ஆண்டுகள் 8 நாட்கள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல அரிய படங்கள் மற்றும் தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பியது.

ரூ. 450 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டது  மங்கள்யான் திட்டம், முதல் முறையிலேயே இந்த திட்டம் வெற்றி பெற்றது. இதன் மூலம் வேற்று கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.  பூமியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் அனுப்பப்பட்ட உலகின் நான்காவது விண்வெளி நிறுவனமாக இஸ்ரோ சாதனை படைத்தது.

கடந்த சில மாதங்களாக மங்கள்யான் உடனான தொடர்பில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், நேற்று துண்டிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நீண்ட நேரம் கிரகணம் ஏற்பட்டதால் எரிபொருள் தீர்ந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் விண்கலத்தின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், தற்போது  மங்கள்யான் விண்கலம் செயலிழந்து விட்டதாக இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன், இரண்டாவது செவ்வாய்ப் பயணம் இன்னும் திட்டமிடல் நிலையிலேயே உள்ளது, மங்கள்யான் -2 திட்டம் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையைச் சுற்றி ஆறு மாத காலப் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்ட மங்கள்யான், கிட்டதட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இருந்தது, இந்தியாவின் மிகப் பெரிய சாதனை மற்றும் பெருமிதமாகும். இந்நிலையில், மங்கள்யான திட்டமானது வரலாற்றில் எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சாதனையாக கருதப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

‘மங்கள்யான்’ வெற்றிக்கு மகுடம் சேர்த்த மங்கையர் திலகங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.