கரூர் மாவட்டத்தில் மெக்கானிக் ஒருவர் கொண்டாடிய ஆயுதபூஜை நிகழ்வில், கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கலந்துகொண்டு ஜெபம் செய்தது, மதநல்லிணக்க நிகழ்வாக அமைந்து, மக்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகம் முழுக்க நேற்று ஆயுதபூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நமக்குப் பல்வேறு வகையில் தொழில் செய்யவும், வாழ்க்கை செழித்தோங்கவும் உதவும் ஆயுதங்களுக்குப் பூஜை செய்து வழிபட்டு, நன்றி பாராட்டுவதுதான் இந்த விழாவின் நோக்கம். அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வாகனப் பழுது நீக்கும் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து நிலையங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், டீக்கடை முதல் பெரிய, பெரிய உணவகம் வரை பல்வேறு இடங்களில் நேற்று ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அதற்குத் தேவைப்படும் பழம், வாழை இலை, வாழை மரம், பொரி, சுண்டல், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, மற்றும் சந்தனம், விபூதி, சூடம், சாம்பிராணி, பூ, மாலை மற்றும் அழகு சாதன அலங்காரப் பொருள்களை நேற்று முன்தினம் முதலே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு எதிர்ப்புறம் திலகவதி மோட்டார்ஸ் என்ற இருசக்கர வாகனம் பழுதுநீக்கு கடையில் கொண்டாடப்பட்ட ஆயுதபூஜை விழா, அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த இருசக்கர வாகனப் பழுதுநீக்கு கடையின் உரிமையாளர் சரவணன் அழைப்பை ஏற்று கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் பூஜையில் கலந்து கொண்டு ஜெபம் செய்தார். பின்னர், சாமிக்குப் படைத்த பொரி, சுண்டல் உள்ளிட்டவற்றை பொதுமக்களோடு சேர்ந்து அந்தப் பாதிரியாரும் உண்டு மகிழ்ந்தார். மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த இந்த நிகழ்வு, அங்கிருந்தவர்களை நெகிழ வைத்திருக்கிறது.
இதுபற்றி, அந்தக் கடையின் உரிமையாளர் சரவணனிடம் பேசினோம்.
“நான் கடந்த 13 வருஷமா இந்த மெக்கானிக் கடையை நடத்திக்கிட்டு வர்றேன். இந்தத் தொழிலை நம்பிதான் என் குடும்ப வருமானம் இருக்குது. அதனால், இந்தத் தொழிலையும், இந்தக் கடையையும் தெய்வமா மதிக்கிறேன். அதனால், ஒவ்வொரு வருடமும் ஆயுதபூஜையை வெகுவிமரிசையா கொண்டாடுவேன். இந்தப் பகுதி மக்களை அழைத்து நிகழ்வை நடத்துவேன். இந்த வருடமும் ஆயுதபூஜையைச் சிறப்பா கொண்டாட ஏற்பாடு செஞ்சேன். அப்போதான் என்மீதும், என் தொழில் மீதும் அதீத அக்கறைகொண்ட இந்தப் பகுதியில் உள்ள சர்ச் பாதிரியார் ஜோஸ்வா சாரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தேன். அவரும் ஆர்வமாகக் கலந்துகொண்டு, நானும், என் தொழிலும், என் கடைக்கு வந்த 50-க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஜெபம் செய்தார்.
எனக்குப் பெருமகிழ்வா இருந்துச்சு. அதேபோல், எங்களோடு அமர்ந்து பொங்கல், சுண்டல், பொரிகடலை, பழம்னு பாதிரியார் சாப்பிட்டார். எங்களோடு பேசிக்கிட்டே விழா முடிஞ்சதும்தான் போனார். இது புதுசில்ல. நாங்க எல்லோரும் இங்கே ஒற்றுமையா, எங்களுக்குள்ள எந்தப் பேதமையும் இல்லாமதான் வாழ்றோம். அவங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நாங்க போறது, எங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அவங்க வர்றதுன்னு நாங்க உறவினர்கள்போலதான் பழகிட்டிருக்கிறோம். இங்குள்ள இஸ்லாமியர்களும் அப்படித்தான் பழகுறாங்க” என்றார்.