ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நடப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க நிகழ்ச்சி வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் அமிர்த சரோவர் திட்டத்தின் மூலம் வெட்டப்பட்ட குளத்தின் கரை பகுதியில் நேற்று நடந்தது. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். மாவட்டம் ழுழுவதும் 5 மணிநேரத்தில் 52 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இப்பணிகளை எலைட் உலக ரெக்கார்டு, ஏசியன் ரெக்கார்டு ஆப் அகாடமி, இந்தியா ரெக்கார்டு அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்களில் இருந்து 8 அலுவலர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். இதை உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழ்களை ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வழங்கினர்.