கடலூர்: வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி, வடலூரில் உள்ள தர்மசாலை, மருதூரில் சன்மார்க்க கொடியேற்றி தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சத்திய ஞானசபையில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில், சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பலரும் பங்குபெற்றனர்.
புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலாரின் இல்லம் அமைந்துள்ளது. 1823-ம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி பிறந்தார் வள்ளலார். சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை கலைவதற்கு அரும்பாடுபட்டார். ‘கடவுள் ஒருவரே, அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்; தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யாதிருத்தல் வேண்டும்,
பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்; உலக அமைதிக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்; மது, மாமிசம் உண்ணாதிருத்தல் வேண்டும்; சாதி, சமயம், மதம், மொழி, தேசம் முதலிய வேறுபாடின்றி இருத்தல் வேண்டும்; எக்காரியத்திலும் பொதுநோக்கம் வேண்டும்; உயிர் இரக்கமே உண்மையான கடவுள் வழிபாடு ஆகும் முதலானவை வள்ளலார் அருளிய சன்மார்க்க நெறிகள் ஆகும்.
வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (அக்.5) வடலூர் தருமசாலையில் அதிகாலை 5 மணி முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு தருமசாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. காலை 9 மணி அளவில் சத்திய ஞானசபையில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை சன்மார்க்கத்தை பின்பற்றும் நபர்கள் மற்றும் பார்வதிபுரம் கிராமவாசிகள் முன்னிலையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் கலந்துகொண்டனர். தொடர் அன்னதானம் நடைபெற்றது.
இதுபோல வள்ளலார் பிறந்த மருதூரில் அவரது 200-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (அக்.5) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என முழக்கத்துடன் அணையா தீபத்தின் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சன்மார்க்க கொடியேற்றும் இடத்திற்கு சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் வருகை தந்தனர். பின்னர் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.
வள்ளலார் இல்லத்தில் தொட்டிலில் மழலை வடிவ வள்ளலார் திருவுருவத்திற்கு மலர் தூவி தீபம் காட்டி வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மற்றும் மருதூர் கிராம வாசிகள் முன்னிலையில் திருஅருட்பா இன்னிசை நடக்க உள்ளது.
மருதூர் கிராமமே வள்ளலாரின் பிறந்தநாளை முன்னிட்டு கோலாகலமாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் மற்றும் சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் செய்து வருகின்றனர்.