இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளின் சாத்தியக்கூறுகள் குறித்து வாக்காளர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் எழுதியிருக்கும் கடிதத்தில், “தேர்தல் வாக்குறுதிகள் மாநிலம்/ஒன்றியத்தின் நிதிநிலைக்குள் அடங்குமா இல்லையா என்பது குறித்து வாக்காளர்களுக்கு உண்மையான தகவல்களை வழங்க வேண்டும். ஏனெனில், வெற்று தேர்தல் வாக்குறுதிகள் பல அசாதாரண விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால் ஏற்படும் விரும்பத்தகாத தாக்கத்தை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.
உச்ச நீதிமன்றம் இலவசம் தொடர்பான மனுவை இன்னும் விசாரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தேர்தலில் கட்சிகள் வாக்குறுதிகள் வழங்குவதை ஆணையத்தால் தடுக்க முடியாது. எனவே, கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளின் சாத்தியக்கூறுகள் பற்றி வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் நிதியுதவித் திட்டத்துடன், வாக்குறுதிகளை அறிவிப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.
கடந்தகாலங்களில், பல கட்சிகள் நிதிரீதியாக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற அந்த மாநிலத்தின் வரவு செலவுத் திட்டத்தை மீறுவதும், அதன் விளைவாக நிதிக்காகப் போராடுவதும் கவனிக்கப்பட்டது. எனவே, வாக்குறுதிகள் அளிக்கும் கட்சி, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வருவாய் ஈட்டும் முறைகள் (கூடுதல் வரி, ஏதேனும் இருந்தால்), செலவின பகுத்தறிவு (தேவைப்பட்டால் சில திட்டங்களைக் குறைத்தல்), உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகள் அல்லது கடன் அதிகரித்தல் மற்றும் அதன்மீதான தாக்கம் பற்றிய விவரங்களை வழங்க வேண்டும்.
நிதி ஆதாரங்களின் இருப்பு, வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் செலவினங்களைச் சமாளிப்பதற்கான வழிகள் ஆகியவற்றை வாக்காளர்களுக்கு கட்சிகள் விரிவாகத் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான தங்கள் கருத்துகளை அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தேசிய மற்றும் அரசியல் கட்சிகளும் அக்டோபர் 18, 2022-க்குள் அனுப்ப வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.