'விக்ரம் வேதா' – பழைய டுவீட் டெலிட் செய்து புதிய டுவீட் போட்ட ஹிருத்திக் ரோஷன்

தமிழில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'விக்ரம் வேதா' படம் ஹிந்தியில் 'விக்ரம் வேதா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த வாரம் வெளியானது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியிலும் இயக்கினார்கள். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்தார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படம் வசூலில் பெரிய சாதனையை நிகழ்த்தாமல் சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு 'விக்ரம் வேதா' பற்றி டுவிட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “வேதா ஒரு அற்புதமான பயணம். அவர் மூலம் கற்றுக் கொண்டேன். என் தோல்விகளின் போது அமைதியாக இருக்கிறேன். பயப்படாமல் மற்றும் மன்னிப்பு கேட்காமல். இந்தவாய்ப்பைக் கொடுத்ததற்காக எனது இயக்குனர்கள், எழுத்தாளர்கள் புஷ்கர் காயத்ரி ஆகியோருக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நன்றி வேதா. நான் அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்,” எனப் பதிவிட்டு கையில் கட்டியிருந்த கருப்பு கயிறையும் 'கட்' செய்யும் வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.

ஆனால், அந்த வீடியோவையும், பதிவையும் டெலிட் செய்துவிட்டு புதிய வீடியோ ஒன்றையும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'வேதா' கதாபாத்திரத்திற்காக எப்படியெல்லாம் பயற்சி எடுத்தார் என்பது பதிவாகியுள்ளது. “வேதா, ஒன்றும் இல்லாததிலிருந்து உருவெடுக்கும் ஒரு செயலாக இருந்தது. இன்று நான் பெருமைப்படக் கூடிய ஒரு கதாபாத்திரமாக உள்ளது. பேசுவது, நடப்பது, நடனமாடுவது, சாப்பிடுவது மற்றும் வேதாவாக வாழ்வது என்பதெல்லாம் பெரும் மகிழ்ச்சியாகக் கற்றுக் கொண்டது. வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஹிருத்திக்கிடம் எப்போதும் வேதா இருப்பான்,” எனப் பெருமையாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டெலிட் செய்த முதல் பதிவிற்கும் அடுத்து பெருமையாகப் பதிவிட்டுள்ள பதிவிற்கும் இடையில் என்ன நடந்தது என்பது ஹிருத்திக்கிற்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.