நவராத்திரியின் 10ஆவது நாளான விஜயதசமி பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் குழந்தைகளுக்கான கல்வியை தொடங்கினால் நல்ல அறிவுடன் கல்வி ரீதியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அதன் அடிப்படையில் சரஸ்வதி பூஜை அடுத்த நாளான விஜயதசமியான இன்று பல கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் சென்று சிறப்பு பூஜைகள் செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வருகின்றனர். குறிப்பாக, அரிசியில் மஞ்சள் வைத்து தமிழ் உயிர் எழுத்துக்களை எழுதி கல்வியை தொடங்கி வருகின்றனர்.
விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் ஃப்ரீகேஜி, எல்கேஜி, ஒன்றாம் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம். அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியன்றும் அரசுப்பள்ளிகளில் ஃப்ரீகேஜி, எல்கேஜி, ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பல பள்ளிகளில் ஆசிரியர்களே முன்வந்து மாணவர் சேர்க்கை நடத்தியிருந்தனர்.
அந்த வகையில், நடப்பாண்டு விஜயதசமியை முன்னிட்டி எந்த அறிவிப்பும் வராததால் மாவட்ட கலவி அதிகாரிகள் குழப்பதில் இருந்தனர். இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இன்று ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வந்து சேர்க்கை நடத்த வேண்டும் என தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனியார் பள்ளிகளில் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.