விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பிரதாப், சாமுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்றின் கரைபகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி, கருப்புநிற ஈமத்தாழி பானை ஓடுகள், 4வகை குறியீடுகளுடன் தாழியின் விளிம்பு பகுதிகள் ஆகியவற்றை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: முதுமக்கள் தாழியைப் பொருத்தவரை 3 விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. ஒன்று இறந்தபின்பு சடலத்தை சம்மணமிட்டு அமரவைத்து சடலத்தின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டத்தில் வைத்து புதைப்பது. இம்முறையில் பானை பெரிய அளவில் இருக்கும்.

இரண்டாவது முறையானது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டுப் புதைப்பதாகும். மற்றொரு முறையானது இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் இட்டுப் புதைக்கும் முறையாகும். தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொற்கை, கொடுமணல், அழகன்குளம், அரிக்கமேடு, மாங்குடி பல்லாவரம், திருக்கழுகுன்றம் போன்ற இடங்களில் தொல்லியல் துறை ஆய்வுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழர்கள் முதுமக்கள் தாழியில், இறந்த மனிதனின் உடலை சம்மணமிட்டு அமரவைத்து, கையில் அவன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து இடுப்பளவிற்கு ஏதேனும் ஒரு தானியத்தையும் அதற்கு மேலே அவன் பயன்படுத்திய ஆடை, அணிகலன்கள் போன்றவற்றை வைத்து அருகிலேயே ஒரு அகல் விளக்கினை எரியும் நிலையில் வைத்து பானையை மூடியுள்ளதாக தெரிவித்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.