பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். தற்போது அவர் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிற `ஆதி புருஷ் (Adipurush)’ படத்தில் ராமர் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிவரும் இப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் (Om Raut) இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3D வடிவில் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் (VFX) காட்சிகள் சரியாக இல்லை கார்ட்டூன் படம் பார்ப்பதுபோல் உள்ளது என்றும் படத்தின் பல காட்சிகளில் ஹாலிவுட் படங்களின் சாயல் இருப்பதாக நெட்சன்கள் சமுக வலைதளங்களில் கேலி செய்து பதிவிட்டு வந்தனர்.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இது குறித்து பதிலளித்து பேசியுள்ளார். அதில். “நெட்சன்களின் கேலியான பதிவுகளைப் பார்த்து நான் கவலைப்படவில்லை. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3D என பெரிய திரைக்காக எடுக்கப்பட்டது. அதில் பார்க்கும்போது கிராபிக்ஸ் (VFX) காட்சிகளின் தரத்தை உணரலாம். அந்த தரத்தை மொபைல் போனில் பார்க்க முடியாது. என்னைக் கேட்டால் படத்தின் காட்சிகள் மற்றும் டீசரை ‘youtube’ பதிவிட வேண்டாம் என்றுதான் நான் சொல்வேன். ஆனால் இன்றைய காலகட்டத்தில் படம் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதால் இதை நாங்கள் செய்யவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம் ” என்று கூறியுள்ளார்.