Doctor Vikatan: என் வயது 23. முகத்தில் பருக்கள் அதிகமிருக்கின்றன. பருக்கள் பிரச்னை இருப்பவர்கள் பால் மற்றும் பால் பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்…
பருக்கள் இருந்தால் உடனே பாலை நிறுத்தாமல், உங்களுக்கு நீங்களே ஒரு சுயபரிசோதனை செய்து பாருங்கள். பால் புரதம் மற்றும் லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்களும் பால் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களும் தவிர்க்கலாம். எல்லோருமே கலப்பின பசுக்களில் இருந்து பெறப்படும் பால், அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளைத் தவிர்க்கலாம்.
முதல் கட்டமாக, பால் மற்றும் பால் உணவுகளை 2 முதல் 4 வாரங்கள் வரை அறவே தவிர்த்துவிட்டு, ரிசல்ட் எப்படியிருக்கிறது என்று பாருங்கள். குறிப்பிட்ட நாள்கள் கழித்து மீண்டும் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பால் பொருள்களைத் தவிர்ப்பதால் உங்களுடைய கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12 மற்றும் புரதச் சத்துகள் பிற உணவுகளிலிருந்து போதுமான அளவு கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உமிழ்நீர் மாதிரியை வைத்துச் செய்யப்படுகிற நியூட்ரிஜெனோமிக்ஸ் டெஸ்ட்டை செய்துபார்த்து உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளலாம். அதற்கான ரிசல்ட் வர 3 வாரங்கள் ஆகும் என்றாலும் அந்தப் பரிசோதனையைச் செய்து பார்ப்பதில் தவறில்லை.
சிலருக்கு பால் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தயிர், மோர் போன்றவற்றை எடுத்துக்கொள்வதில் பிரச்னை இருக்காது. நாட்டுப் பசுமாடுகளிலிருந்து கிடைக்கும் பாலைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. அவற்றுக்கு இயற்கைத் தீவனம் கொடுத்து, சரியாகப் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனவா என்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.
எப்போதும் வீட்டில் தயாரித்த உணவுகளையே சாப்பிடவும். ஃப்ரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கீரைகள் போன்றவற்றை எந்தச் செயற்கை நிறமிகளும் மணமூட்டிகளும் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான வாழ்க்கைமுறை, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, போதிய தூக்கம், உடற்பயிற்சி போன்றவையும் முக்கியம். இவை எல்லாம் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பருக்கள் இல்லாமலும் பாதுகாக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.