சென்னை: அண்ணாசாலையில், பைக் சாகசம் செய்த ஐதராபாத் இளைஞர் நீதிமன்ற உத்தரவுப்படி அதே இடத்தில் போக்குவரத்து தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை தேனாம்பேட்டை – அண்ணாசாலையில் கடந்த 9-ம் தேதி இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் சிலர் அபாயகரமான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, இதுதொடர்பாக 6 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்நிலையில், பைக் ரேஸில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஐதராபாத்தைச் சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினோய்(22) என்ற யூடியூப் பிரபலமான இளைஞர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘‘சம்பந்தப்பட்ட இளைஞர் எங்கு பைக் சாகசத்தில் ஈடுபட்டாரோ, அதே இடத்தில் 3 வாரங்களுக்கு திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணிமுதல் 6.30 மணி வரையிலும் போக்குவரத்து விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும். மற்ற நாட்களில் காலை 8 முதல் பகல் 12 மணி வரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் வார்டு பாய்க்கு உதவியாக இருக்க வேண்டும்’’ என்று தீர்ப்பு கூறியிருந்தார். அதன்படி சம்பந்தப்பட்ட இளைஞர் அலெக்ஸ் பினோய் நேற்று காலை அண்ணாசாலை – தேனாம்பேட்டை சாலை சந்திப்பில், ‘‘சாலை விதிகளை கடைபிடிப்போம். சாலை விதிகளை மதிப்போம். விபத்துகளைத் தவிர்ப் போம். இரு சக்கர வாகனத்தைக் கொண்டு சாலையில் சாகசங்கள் எதுவும் செய்ய மாட்டேன்’’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், ‘‘இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டக் கூடாது. குடிபோதையில் வாகனங்களை இயக்கக் கூடாது. தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும்’’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளிடம் விநியோகம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இனி நான் எங்கேயும் பைக் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்’’ என்று உறுதியுடன் கூறினார். நீதிபதி வழங்கியுள்ள இந்ததீர்ப்பு பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை கதிகலங்க வைத்துள்ளது. இதன் மூலம் பைக் சாகசங்கள் வெகுவாக குறையும் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.