மகாராஷ்டிராவில் கொடிகட்டி பறந்த சிவசேனாவின் செல்வாக்கு, தற்போது சச்சரவில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறது. பால் தாக்கரே மகனிடம் இருந்தே கட்சியை பறித்து தன்வசமாக்கி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இருப்பினும் இருதரப்பிலும் ஆதரவாளர்கள் இருப்பதால் சிவசேனா இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு விஷயத்திலும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
கிட்டதட்ட தமிழகத்தில் அதிமுகவிற்குள் நிலவும் ஈபிஎஸ், ஓபிஎஸ் சண்டை மாதிரி தான். இந்நிலையில் தசரா பேரணியில் யாருடைய ஓங்கப் போகிறது? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி பார்க்கில் சிவசேனா சார்பில் நடக்கும் தசரா பேரணி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இங்கு நடத்தும் உரிமையை பெற இருதரப்பும் முயற்சிக்கையில் நீதிமன்ற தீர்ப்பு உத்தவ் தாக்கரேவிற்கு சாதகமாக வந்தது.
இருப்பினும் முதல்வரும், சிவசேனாவின் மற்றொரு அணியாக திகழும் ஏக்நாத் ஷிண்டே அசரவில்லை. BKC எனப்படும் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் ஏற்பாடுகளை செய்தார். இருதரப்பும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் தசரா பேரணி நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இதில் சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரே நடத்திய பேரணியில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.
ஷிண்டே தரப்பில் 3 லட்சம் பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இருவருமே முதல்முறை இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி பிரமிக்க வைத்துள்ளனர். இதையே சாதனையாகவே சொல்லலாம். போலீசாரின் கணக்கின் படி, உத்தவ் தாக்கரேவிற்கு ஒரு லட்சம் பேரும், ஏக்நாத் ஷிண்டேவிற்கு 2 லட்சம் பேரும் திரண்டுள்ளனர். இதன்மூலம் ஷிண்டேவின் கைகள் ஓங்கிவிட்டதாக பேசி வருகின்றனர்.
அதேசமயம் ஷிண்டேவின் உரை நிகழ்ந்த போது 50 சதவீதத்திற்கும் மேல் வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தசரா பேரணியில் சுவாரஸியமூட்டும் ஒரு விஷயம் நடந்திருக்கிறது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா சார்பில் வைக்கப்பட்ட ராவணன் சிலையானது 50 பெட்டிகளால் செய்யப்பட்டிருந்தது. 50 என பெரிதாக தெரியும் வகையில் ராவணனின் உருவத்தில் அச்சிட்டு வைத்தனர். இந்த 50 என்ற எண்ணிக்கையின் பின்னால் அரசியல் ஒளிந்திருக்கிறது.
அதாவது, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் 50 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு தான் ஷிண்டே பக்கம் சாய்ந்து விட்டதாக உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார். இதைத் தான் அப்படி குறிப்பிட்டுள்ளனர். கடைசியில் அம்பு எய்தி ராவணன் வீழும் போது, சிவசேனாவின் அதிருப்தி கூட்டமே வீழ்ந்து விட்டதாக உத்தவ் தாக்கரே தரப்பிற்கு அப்படியொரு மகிழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அரசியல் களத்தில் யார் முன்னால் செல்கிறார்கள் என்பது தானே முக்கியம். இதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.