திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமினா, ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரின் முதல் கணவர் ராமச்சந்திரன் இறந்து 10 ஆண்டுகளான நிலையில், இரண்டாவது கணவரான சந்திரகுமாருடன் பிலோமினா வசித்து வருகிறார். பிலோமினா-ராமச்சந்திரன் தம்பதிக்கு பிரவீனா, தீபக், பாண்டியன், பிரியா ஆகிய இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
மூத்த மகளான பிரவீனா பல்லடம் மங்கலம் சாலையில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. கணவர் சேகர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அழகு நிலையத்துக்கு வந்த பல்லடம் வேலப்பகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவருடன் பிரவீனாவுக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் விரிவடைந்து தமிழ்ச்செல்வியின் கணவர் சிவகுமாருடன் பிரவீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிவகுமாருடன் பிரவீனா மாயமானார். அதையடுத்து தன் மகளைக் கண்டுபிடித்து தருமாறு பல்லடம் காவல் நிலையத்தில் பிரவீனாவின் தாய் பிலோமினா அண்மையில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து மாயமான பிரவீனாவை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், “என்னை தொழில் பாட்னராக சேர்த்துக் கொள்வதாக கூறி, சிவகுமார் போலி ஆவணங்களைத் தயாரித்து வங்கியில் கடன் பெற்றார். தற்போது என்னைக் கடத்தி வந்து சித்ரவதை செய்கிறார். அவரிடமிருந்து காப்பாற்றுங்கள்” என பிரவீனா கண்ணீர் மல்கப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, ஈரோட்டிலிருந்த பிரவீனாவைக் கண்டுபிடித்த போலீஸார், அங்கிருந்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரவீனா, சிவகுமார் அவர் மேலாளர் தமிழரசு ஆகிய மூவர்மீதும் கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஃபைனான்சியர் குமரேசன் என்பவர் ஏற்கெனவே மோசடி புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
அந்தப் புகாரில், “எனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை தொழில் பார்ட்னர் ஆக்குவதாகக் கூறி பிரவீனா உள்ளிட்ட மூவரும், ஈரோடு கருங்கல்பாளையத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்து ரூ.2 கோடி கடன் பெற்றுக் கொண்டனர். ஆனால், அந்தப் பணத்தை எனக்கு தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்” எனத் தெரிவித்திருந்தார். அதையடுத்து பிரவீனா, சிவகுமார், தமிழரசு ஆகிய மூவர்மீதும் மோசடி வழக்கு பதிவுசெய்ததுடன், பிரவீனா, சிவகுமாரை போலீஸார் கைதுசெய்தனர்.
இந்த நிலையில், சிவகுமாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அண்மையில் வெளியான வீடியோ பிரவீனாவின் தாய் பிலோமினாவின் இரண்டாவது கணவர் சந்திரகுமார் வெளியிட்டிருப்பதாகவும், அது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.