வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
கனடாவில் இலையுதிர் காலத்தில் பல இடங்கள் சென்று இலைகளின் வண்ணமயமான அழகை கண்டு களிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பார்த்த இடங்கள் அனைத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது ஆல்கன்குவின் பூங்கா. இந்த பூங்கா டொரான்டாவிலிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும், அங்குள்ள நெடுஞ்சாலைகள் கார்கள் வழுக்கிக்கொண்டு செல்லுமளவுக்கு மென்மையாக இருப்பதால் 2 1/2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். காரில் செல்கையில் சாலைகளின் இருபக்கங்களிலும் இலைகளின் வண்ணமயமான அழகினை கண்டு களித்த படியே செல்வது மனதிற்கும், கண்ணுக்கும் இனிமை அளிக்கும். செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே Tim Hortons எனப்படும் காபி ஷாப்பில் டீ, காபி, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு, இளைப்பாறி விட்டு செல்லலாம்.
இலையுதிர் காலத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக இருப்பதால் இலைகளுக்குத் தேவையான குளோரோபில்(பச்சையம்) கிடைப்பதில்லை. இதனால் இலைகள் நிறம் மாறி பின்னர் மெல்ல மெல்ல உதிர்ந்துவிடும். இது நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளையும், இழப்புகளையும் நினைவூட்டும். பனி முடிந்து வசந்த காலம் வரும்போது இலைகள் துளிர்விடும். சூரிய வெளிச்சம் மூலம் குளோரோபில்(பச்சையம்) கிடைப்பதால் மரங்கள் பச்சையாகக் காட்சியளிக்கும்.வசந்த காலம் நமக்கு வாழ்க்கையில் நம்பிக்கையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
ஆல்கன்குவின் பூங்காவின் சிறப்பு என்னவென்றால், இங்கு பச்சை நிறம் மாறாத கோன்(கூம்பு) வடிவில் இருக்கும் கிறிஸ்துமஸ் மரங்களுடன் சேர்ந்து, சிவப்பு – ஆரஞ்சு – மஞ்சள் – பழுப்பு என பல வண்ணங்களில் இலைகள் இருக்கும் மற்ற மரங்களும் சேர்ந்து காணப்படுவது தான். சிலர் இந்த பூங்காவை ஒரு பூகோள அதிசயம் என்றும், இப்படிப்பட்ட இடம் உலகிலேயே எங்கும் இல்லை என்றும் சொல்கிறார்கள். இந்த இயற்கையின் எழிலை காணவே கண் கோடி வேண்டும். அனைத்து வண்ணங்களையும் ஒரே இடத்தில் இலைகளில் காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
ஆல்கன்குவின் பூங்காவின் அருகில் உள்ள மஸ்கோகா என்ற இடத்தில் தான் நான் தங்கியிருந்தேன். இதுவும்
இலையுதிர் காலத்தில் தென்படும் வண்ணமயமான இலைகளை காண பிரசித்தி பெற்ற இடமாகும். மஸ்கோகா போன்று ஹாமில்டன், நயாகரா ஃபால்ஸ், டோபர்மோரி என பல இடங்களில் இலையுதிர் காலம் வண்ணமயமாக இருக்கும். இப்படி எத்தனை இடங்கள் இருந்தாலும், எந்த இடமும் ஆல்கன்குவின் பூங்காவிற்கு நிகராக முடியாது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.