மிஷன் 2024 தொடங்கிடுச்சு. இதுதான் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக கே.சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் முழக்கமாக இருந்து வருகிறது. தேசிய அளவிலான புதிய அரசியல் கட்சிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதிய கட்சியின் பெயரை அறிவித்த உடனேயே, தெலங்கானா முழுவதும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். தொடக்க விழாவை ஒட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர் திரளாக ஹைதராபாத் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வாழ்த்துகளும் கே.சந்திரசேகர் ராவிற்கு வந்து சேர்ந்தன. எல்லாம் சரி தான்.
கவிதா எங்கே? என்பது தான் கட்சியினர் மட்டுமின்றி தெலங்கானா மாநில மக்களின் கேள்வியாகவும் இருக்கிறது. முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் தான் கவிதா. மாநில மேலவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் முக்கியத் தலைவர்களில் இவரும் ஒருவர். அப்படியிருக்கையில் புதிய கட்சியின் தொடக்க விழாவிற்கு கவிதா ஏன் வரவில்லை?
ஒருவேளை அவர் அழைக்கப்படவே இல்லையா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அவர் எங்கு தான் இருந்தார்? எனத் தேடிப் பார்க்கையில் தனது வீட்டில் ஆயுத பூஜையை அமைதியாக கொண்டாடியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தனது தந்தை புதிய கட்சி தொடங்கியது தொடர்பாக எந்தவொரு பதிவும் இடம்பெறவில்லை.
கட்சி தொடக்க விழாவிற்கு வந்திருந்த தேசியத் தலைவர்களை முன்னால் வந்து வரவேற்றார் கே.சந்திரசேகர் ராவின் மகனும், அமைச்சருமான கே.டி.ராமா ராவ். அப்படியெனில் கவிதாவிற்கு மட்டும் ஏன் அப்படியொரு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பாரத் ராஷ்டிர சமிதி தொடங்கிய முதல் நாளிலேயே கட்சிக்குள் பிரிவினையா? என்று பலரும் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
அதுமட்டுமின்றி தெலங்கானா மாநிலத்தில் உள்ள முனுகோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காக கேசிஆர் கட்சியினர் தயாராக தொடங்கிவிட்டனர். இதையொட்டி தேர்தல் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் பொறுப்பாளர்களின் பெயர்களை கட்சி தலைமை அறிவித்தது. அதிலும் கவிதாவின் பெயர் இல்லை. எனவே கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா கவிதா? எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த விஷயத்தை கையிலெடுத்துள்ள பாஜக, கேசிஆரின் கட்சி மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சிக்க தொடங்கிவிட்டது.