மும்பை: குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து – மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நவீன ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தை 52 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு 6 முதல் 7 மணி நேரத்துக்குள் இந்த ரயில் சென்றுவிடும். வைபை, 32 இன்ச் டி.வி போன்ற வசதிகள் இதில் உள்ளன.
கடந்த மாதம் 30ம் தேதி தான் இந்த ரயில் துவக்கப்பட்டது. இதனிடையே, தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே விபத்தில் சிக்கியுள்ளது வந்தே பாரத். காலை 11.15 மணியளவில் வத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணம் செய்துகொண்டிருந்த போது தண்டவாளத்தில் வழிதவறி வந்த நான்கு எருமை மாடுகள் மீது ரயில் மோதியதால், இன்ஜின் சேதமடைந்தது. அதேநேரம், விபத்தில் மூன்று எருமைகள் உயிரிழந்தன. விபத்தின் காரணமாக குஜராத்தின் காந்திநகர் ரயில் நிலையத்தை அடைவதற்கு சுமார் அரை மணி நேரம் தாமதமானது.
விபத்தின் குறித்து பேசிய மேற்கு ரயில்வே அதிகாரி, “ஒரு சில எருமை மாடுகள் ரயில் பாதையில் வந்தன. ஓட்டுநர் பிரேக் போட்டிருந்தால் பயணிகளின் உயிருக்கு சேதம் விளைவிக்கும் ஒரு பெரிய சம்பவம் நடந்திருக்கும். விபத்தின்போது ரயில் சுமார் 140 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இந்த வேகத்தில் செல்லும்போது பிரேக் போட்டால் ரயில் தடம் புரண்டிருக்கும். இழப்பு பெரியதாக இல்லை என்றாலும், சேதம் இன்ஜின் சேதமடைந்துள்ளது. அது பழுதுபார்க்க அனுப்பப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.