கோயில் நில இழப்பீடு விவகாரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலமேடு கோயில் நில இழப்பீடு தொகை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களது கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு கூறினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த கோயில் நிலங்களான 98.5 சென்ட் நிலத்தை கடந்த 2014ல் ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீட்டை ரயில்வே நிர்வாகம் வழங்க உள்ளது. இதற்காக சிலர் தவறனான ஆவணங்களை கொடுத்து அந்த இழப்பீட்டை பெற முயற்சி செய்கின்றனர். இது குறித்து நாங்கள் கடந்த 22.6.2022 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டோம். அப்போது கோயில் நிலங்களுக்குரிய சொத்துக்கான இழப்பீட்டு தொகை முழுவதும் சாலாமேடு பொதுமக்களுக்குத்தான் சேர வேண்டியது. தனிப்பட்ட நபர்களுக்கு வழங்கக் கூடாது என்று உரிய விவரங்களுடன் ஆட்சியரிடம் கொடுத்தோம்.

இதன் அடிப்படையில் அம்மனுவின் மீதான நடவடிக்கையாக கடந்த 13.7.2022 அன்று இருதரப்பினரையும் அழைத்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். அதன்படி அந்த தனி நபர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகை உரிய விசாரணை மேற்கொண்டு சாலாமேடு பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் சாலாமேடு பொதுமக்களின் வரிப்பணத்தில் கிராம பொது பயன்பாட்டுக்காக அன்றைய ஊர் நாட்டான்மைகளாக இருந்தவர்களின் பெயரில் ஏலம் எடுத்த சொத்தை யு.டி.ஆரில் திருத்தத்தின்போது முறைகேடாக எந்தவொரு கிரைய ஆவணமும் இல்லாமல் தனிநபர் ஒருவர் அவரது பெயரில் பட்டாவை மாற்றிக்கொண்டு பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை பெற முயற்சிப்பதால் ஊரில் அமைதியும், ஒற்றுமையும் இல்லாமல் மக்கள் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர்.

இந்நிலை இப்படியே தொடராமல் உடனடியாக தீர்வு காணவேண்டும் என அம்மனுவில் கூறியிருந்தனர். தொடர்ந்து அங்கு வந்த ஆர்டிஓ ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.