திமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளராக தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்டச் செயலாளராக தளபதி முருகேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், காந்திபுரத்தில் உள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் வைக்கப்பட்டிருந்த பெரியார், கருணாநிதி ஆகியோரது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர், வடகோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தொண்டர்களிடையே மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் பேசும்போது, ‘‘இந்த பொறுப்பை ஏற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி, தமிழகத்தில் சிலர் வளர நினைக்கின்றனர். அது ஒருநாளும் முடியாது. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியடையும்,’’ என்றார்.
கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் ரவி, துடியலூரில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து வடகோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்டச் செயலாளராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்பு மாவட்ட செயலாளர் ரவி பேசும்போது,‘‘கடைக்கோடி தொண்டனான எனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனது மாவட்டத்துக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன். மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன்,’’ என்றார்.
தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், சுந்தராபுரத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கும், கருணாநிதியின் உருவப் படத்துக்கும் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘எனது மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன். மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன்,’’ என்றார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன், புதிய நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.