சோனியாவை காரில் வர சொன்ன ராகுல்: ஒற்றுமை பயணத்தில் நெகிழ்ச்சி!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார். கடந்த 10ம் தேதி கேரளாவிற்கு சென்ற அவர் அங்கு சுமார் 19 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். தற்போது கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.

இதனிடையே, ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கர்நாடக மாநிலம் வந்தார். மைசூரு அருகே உள்ள கபினி ரெசார்ட்டில் தங்கியிருந்த ராகுல் காந்தியை சந்தித்த சோனியா காந்தி, அவருடனேயே தங்கியிருந்தார். பாதயாத்திரைக்கு ஓய்வு விடப்பட்டிருந்தததால், எச்.டி.கோட்டையில் உள்ள நாகரஒலே வனவிலங்கு பூங்காவில் சோனியாவும், ராகுலும் வனவிலங்குகளை பார்த்து ரசித்தனர். பேகூர் என்ற கிராமத்தில் உள்ள பீமனகோலி கோயிலில் தசரா பண்டிகையையொட்டி சோனியா காந்தி சாமி தரிசனம் செய்தார்.

இந்த நிலையில், இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் இன்று மீண்டும் தொடங்கியது. பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியில் இருந்து இன்று காலை தனது நடைபயணத்தை ராகுல் காந்தி துவங்கினார். இந்த ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தியும் கலந்து கொண்டார். உடல்நிலை காரணமாக நீண்ட நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நிலையில், தொண்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சோனியா காந்தி நடைபயணத்தில் கலந்து கொண்டார்.

ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ பாதயாத்திரையில் சோனியா காந்தி கலந்து கொண்டு சில கி.மீ., தூரம் நடந்தார். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை தொடர்ந்து நடக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த ராகுல் காந்தி, அவரை காரில் வாருங்கள் எனவும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து நடப்பதாக சோனியாக காந்தி கூறியும் ராகுல் காந்தி அதை ஏற்கவில்லை. தன் தாயாரை காரில் ஏற்றிவிட்ட பிறகே தன் நடைபயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.