தமிழ்நாட்டுக்கு வாங்க.. எல்லா வசதியும் இருக்கு: தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் அழைப்பு!

இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், ஏற்றுமதியில் மூன்றாவதாகவும், தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாகவும் உள்ளது. எனவே செக் குடியரசு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செக் குடியரசு சர்வதேச கண்காட்சியில் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV கண்காட்சியில் பங்கேற்றுள்ளார்.

செக் குடியரசு நாட்டில் (5.10.2022) நேற்று நடைபெற்ற MSV கண்காட்சியின் துவக்க விழாவில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் முன்னிலையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவிற்கும் செக் குடியரசிற்கும் இடையிலான பொருளாதார உறவு என்பது 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் வலிமையையும் வளர்ச்சியையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் திறமையான தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாடு இந்தியாவிலேயே ஏற்றுமதி மற்றும் வணிகம் செய்வதில் 3வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு 6 விமான நிலையங்கள், 4 பெரிய துறைமுகங்கள், நன்கு இணைக்கப்பட்ட சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் என ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி , ஜவுளி, தோல், விமானம் தயாரிப்பு , பாதுகாப்பு , மருந்து போன்ற துறைகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான MSME நிறுவனங்கள் உள்ளன. உணவு பதப்படுத்தும் தொழிலில் தமிழகத்தில் உள்ள MSME நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தக தொடர்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செக் குடியரசு மற்றும் தமிழ்நாடு பல பொதுவான தொழில்கள் உள்ள நிலையில் குறிப்பாக வாகன உற்பத்தி தொழில், கனரக தொழில், பாதுகாப்பு மற்றும் விமானம் தயாரிப்பு துறையில் பல வணிக வாய்ப்புகள் உள்ளன. Hyundai, BMW, Renault மற்றும் Nissan போன்ற முக்கிய வாகன தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளததால் தமிழ்நாடு இந்தியாவின் வாகன உற்பத்தியில் மையமாக திகழ்கின்றது. இதுபோன்ற பெரும் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் உள்ள MSME நிறுவனங்கள் உதிரி பாகங்கள் வழங்குகின்றன. இதனால் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, ஒரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையமாக திகழ்கிறது.

இந்தியாவின் கனரக மின் உபகரணங்கள் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 8 சதவீதம் ஆகும். விமான உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறைக்கு 21.9 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துறையின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட தொழில் பெரும் வழிதடம் 2019 இல் தொடங்கப்பட்டது .

இந்தத் துறைகளைத் தவிர்த்து, ஜவுளி, தோல், மின்னனு பொருட்கள் உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக திகழ்வதால் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முனைவோர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைக்கின்றேன்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.