தாயார் சோனியா காந்தியின் ஷூ லேசை கட்டிவிட்ட ராகுல் காந்தி – வைரல் புகைப்படம்

மாண்டியா: இந்திய ஒற்றுமை பயணத்தில் உடன் நடந்து வந்த தனது தாயார் சோனியா காந்தியின் ஷூ லேசை, ராகுல் காந்தி கட்டிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த மாதம் 8-ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா வழியாக தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து சோனியா காந்தியும் சில கிலோ மீட்டர் தூரம் நடந்தார். அப்போது, சோனியா காந்தியின் ஷூ லேஸ் கழன்றதை அடுத்து, ராகுல் காந்தி எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக அதனைக் கட்டிவிட்டார். அருகில் இருந்தவர்கள் இதனை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்து சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளனர். அம்மா – பிள்ளை பாசத்திற்கு இது எடுத்துக்காட்டு என காங்கிரஸ் கட்சியினர் சிலாகித்துள்ளனர்.

இந்திய ஒற்றுமை பயணத்தின் 11-ம் நாளின்போதும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, உடன் வந்த கட்சி பிரமுகர் ஒருவரின் சுமார் 5 வயது மகளின் காலணி கழன்றதால் அச்சிறுமி நடக்க சற்று சிரமப்பட்டார். அப்போது, ராகுல் காந்தி அந்தச் சிறுமிக்கு உதவினார். இதையடுத்து அந்தச் சிறுமி சகஜமாக நடக்கத் தொடங்கினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இரு முறை கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், வேறு சில உடல் பிரச்சினைகளாலும் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். இந்த ஆண்டில் அவர் பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.