கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகளை கரைத்து கொண்டிருந்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 8 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். 50 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பொது இடங்களில் துர்கா தேவிக்கு சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்படும். இந்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சிலை கரைப்பு தினமான நேற்று துர்கா சிலைகள் நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் உள்ள மால் ஆற்றில் துர்கா சிலையை கரைத்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி தவித்தனர். தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யமுனை ஆற்றில் மூழ்கி சிறுவன் உள்பட 3 பேர் பலி: இதே போன்று உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா நகருக்குட்பட்ட சிக்கந்திரா காவல் நிலைய பகுதியில் 15 வயது சிறுவனும், நியூ ஆக்ரா காவல் நிலைய பகுதியில் 19 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள், துர்கா சிலை கரைப்பின் போது யமுனை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாலை வரை மீட்பு பணி தீவிரமாக நடந்தது. இரவாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் தேடுதல் பணி தொடரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் இரங்கல்: இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் துர்கா பூஜை விழாவின் போது நடந்த அசம்பாவிதம் சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.