திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகனும், பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக உள்ள திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா. அதற்கு நன்றி கூறும் விதமாக தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார் சூர்யா சிவா.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா, தனக்கென்று கைலாசா என்ற தனி நாட்டினை உருவாக்கி அங்கு தற்போது இருக்கிறார். கைலாசா என்ற நாட்டுக்கு தான் அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா அனைத்தையும் உருவாக்கி உள்ளார். பாலியல் புகாரில் சிக்கி பேசுபொருளாக மாறிய நித்யானந்தா, தற்போது தனி உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவ்வப்போது அவரின் உடல்நிலை குறித்து செய்திகளும் வந்து கொண்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று விஜயதசமி நிகழ்ச்சியில் கைலாசாவில் இருந்து நித்யானந்தா சார்பில் பாஜகவின் திருச்சி சூர்யாவிற்கு தர்மரட்சகர் விருது வழங்கப்பட்டது. இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடந்து பரப்பி வருவதால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டது.
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்; விஜயதசமி திருநாளில் கைலாசாவிற்கு வந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் கைலாசா விருதுகளை பெற்று இருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன் என நித்யானந்தா பேசியுள்ளார். மேலும், திருச்சியை சேர்ந்த திரு. சூர்யா சிவாவையும் வணங்கி வரவேற்கிறேன் என நித்யானந்தா அனைவரையுலம் வரவேற்றார்.
அதன் பிறகு பேசிய அவரது சீடர்கள்; திருச்சி சூர்யா சிவாவை அன்போடும், மரியாதையோடும் வணங்கி வரவேற்கிறோம். அரசியல்வாதிகள் என்பவர்கள் வெறும் தலைவர்கள் மட்டும் இல்லை. அவர்கள் தான் இந்த உலகத்தை மேலும் சிறந்த இடமாக, அழகான இடமாக மாற்றுவதற்காக முடிவுகளை எடுக்கும் முக்கியமானவர்கள்.
திருச்சி சூர்யா இந்துக்களுக்கு தனது பங்களிப்பு மற்றும் சேவைகளை செய்து கொண்டு இருப்பதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். தற்போது அவருக்கு கைலாசாவின் தர்மரக்ஷகா விருது வழங்குவது மிகவும் பெருமைக்கு உரியதாக இருக்கிறது. இளைஞர்களால் சமூக ஊடங்களில் பெருமளவு பின்பற்றப்படும் ஒரு அரசியல் தலைவருக்கு இந்த விருதினை கைலாசா வழங்குகிறது.
திருச்சி சூர்யா சிவா பேசும் போது; நித்யானந்தாவிற்கும் அவரது அன்பான சீடர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நான் மிகப்பெரிய திருவண்ணாமலை அண்ணாமலையாரின் பக்தன். அதன் காரணமாக தான் இன்று தமிழகத்தில் பாஜகவில் அண்ணாமலை அவர்களின் தலைமையின் கீழ் பணியாற்றும் வாய்ப்பினை பெற்று இருப்பதாக நான் நினைத்து இருக்கிறேன்.
அதையும் தாண்டி இன்று ஐயாவின் ஆசிரமத்தில் இருந்து இந்த விருது கிடைத்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இதனால் நான் மிகவும் பாக்கியம் அடைந்து இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.