அரவிந்த் கார்த்திக்… எந்தப் பயிற்சி மையத்திலும் சேராமல், நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்திருக்கிற சென்னை மாணவரான இவர், வெகு விரைவில் தொடங்கவிருக்கிற கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார். இவர் பெற்றிருக்கிற மதிப்பெண்ணுக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலேயே படிப்பதற்கு இடம் கிடைத்துவிடும் என்றாலும், அங்கும் கட்டணம் செலுத்துவதற்கான தொகை இல்லாமல் போராடிக்கொண்டிருக்கிறார். மாணவர் அரவிந்த் கார்த்திக்குடன் பேசினோம்.
”அப்பா இளங்கோ விருகம்பாக்கத்துல இருக்கிற தேவி கருமாரியம்மன் தியேட்டர் கேன்டீன்ல வேலைபார்த்துட்டிருந்தார். கொரோனா நேரத்துல அப்பாவுக்கு வேலை போயிடுச்சு. அதுவரைக்கும் ஹவுஸ் வொயிஃபா இருந்த அம்மா மகாலட்சுமி எக்ஸ்போர்ட் வேலைக்குப் போயி குடும்பத்தைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அப்பாவுக்கு இதயத்துல பிரச்னை இருக்கு. நரம்பு சம்பந்தமான பிரச்னையும் இருக்கு. வேலை பறிபோயிட்ட ஸ்ட்ரெஸ்ல இதெல்லாம் இன்னும் அதிகமாயிடுச்சு.
எனக்கு சின்ன வயசுல இருந்தே டாக்டராகணும்னு ஆசை. காரணம் எங்கம்மாதான். அம்மாவுக்கு நான்தான் முதல் பிள்ளை. அவங்க டெலிவரியப்போ, அம்மாவையும் அவங்க வயித்துல இருந்த என்னையும் டாக்டர்ஸ் ரொம்ப போராடிக் காப்பாத்தினாங்களாம். அதனால, எனக்குப் புத்தி தெரிய ஆரம்பிச்சிதுல இருந்து ‘நீ டாக்டராகணும்’னு அம்மா சொல்லி சொல்லி வளர்த்தாங்க. தவிர, அப்பா அடிக்கடி உடம்பு சரியில்லாம கஷ்டப்படுறதைப் பார்த்து பார்த்து, ‘டாக்டராகியே தீரணும், அதுலேயும் நியூராலஜிஸ்ட் ஆகணும்’னு தீர்மானத்தோட படிக்க ஆரம்பிச்சேன். டென்த்ல 500-க்கு 460 மார்க் வாங்கி ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன். ப்ளஸ்டூலயும் 600-க்கு 568 மார்க் வாங்கி மறுபடியும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன்.
அதுக்கப்புறம்தான் உண்மையான பிரச்னையே ஆரம்பிச்சிது. நீட் எக்ஸாம் கோச்சிங்கிற்கு என் குடும்பத்தால பணம் கட்ட முடியாத நிலைமை. லைப்ரரி, யூடியூப், இன்டர்நெட்னு நானே தேடித் தேடி படிச்சு நீட் எக்ஸாமுக்கு ரெடியானேன். ஆனா, முதல் முயற்சியில 720-க்கு 462 மார்க்தான் வாங்கினேன். இந்த மார்க்குக்கு அரசு மருத்துவ கல்லூரியில இடம் கிடைக்காது. அதனால, மறுபடியும் எந்தப் பயிற்சி மையத்துக்கும் போகாம நானே படிச்சு நீட் எக்ஸாம் எழுதினேன். இந்த முறை 720-க்கு 665 மார்க் வாங்கிட்டேன். இந்த மார்க்குக்கு கண்டிப்பா அரசு மருத்துவ கல்லூரியில சீட் கிடைச்சிடும். ஆனா, அதுக்கும் வருஷத்துக்கு 60 ஆயிரம் வரைக்கும் செலவாகும். அந்தத் தொகையை என் அம்மாவால கட்டவே முடியாது. இப்போ எனக்கு யாராவது உதவி செஞ்சா மட்டுமே, என் டாக்டர் கனவு நனவாகும்” என்று வருத்தமாகப் பேசி முடித்தார் மாணவர் அரவிந்த் கார்த்திக்.
இதுபோல உதவித் தேவைப்படுபவர்களுக்கு, வாசகர்களுடன் இணைந்து வாசன் அறக்கட்டளை தொடர்ந்து உதவி செய்து வருகிறது.
மாணவர் அரவிந்த் கார்த்திக்கு உதவ விரும்புவர்கள் https://easypay.axisbank.co.in/easyPay/makePayment?mid=NDA2NDY%3D என்ற இந்த லிங்க் வழியே பண உதவி செய்யலாம். பண உதவி செய்யும் வாசகர்கள் அந்தத் தகவலை [email protected] என்ற மெயில் ஐ.டி.க்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இது, உங்களுக்கு 80-ஜி ரசீது வழங்க உதவியாக இருக்கும்.