நீதிபதிகள் நியமனத்துக்கு எழுத்துமூலம் ஒப்புதல் கேட்பதா? – நீதிபதிகள் அதிருப்தி

புதுடெல்லி,

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளையும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் நியமிப்பதில் ‘கொலிஜியம்’ என்ற அமைப்பு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியத்தில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே.கவுல், எஸ்.ஏ.நாசர், கே.எம்.ஜோசப் ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கு 4 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரவிசங்கர் ஜா, பாட்னா ஐகோர்ட்டு தலைைம நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய்குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

எழுத்துமூலம் ஒப்புதல்

அதுதொடர்பாக விவாதிக்க கடந்த 30-ந்தேதி கொலிஜியம் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் ஒரு உறுப்பினர் வர முடியாததால், கூட்டம் நடக்கவில்லை. மறுநாள் முதல் தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது. 10-ந்தேதிதான் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு திறக்கப்படுகிறது.

எனவே, இடைப்பட்ட நாட்களில் ஒப்புதல் பெறுவதற்காக, நீதிபதிகள் பதவிக்கான 4 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, அதற்கு எழுத்துமூலம் ஒப்புதல் அளிக்குமாறு ‘கொலிஜியம்’ உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அதிருப்தி

வழக்கமாக, நேரடி ஆலோசனைக்கு பிறகு, நீதிபதிகள் நியமன தீர்மானத்தில் ‘கொலிஜியம்’ உறுப்பினர்கள் கையெழுத்திடுவார்கள். எனவே, வழக்கத்துக்கு மாறாக, நேரடி கூட்டம் நடத்தாமல் எழுத்துமூலம் ஒப்புதல் கேட்டதற்கு சில உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

‘கொலிஜியம்’ உறுப்பினர்கள் 2 பேர், தங்கள் அதிருப்தியை தெரிவித்து இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.