புதிய தேசிய கட்சி துவக்க விழா சந்திரசேகர ராவ் மகள் கவிதா புறக்கணிப்பா? தெலங்கானா அரசியலில் பரபரப்பு

புதுடெல்லி: தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் புதிய தேசிய கட்சி தொடக்க விழாவில், அவருடைய மகள் கவிதா கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலங்கானாவில் ஆட்சி செய்து வரும் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), நேற்று முன்தினம் தேசிய கட்சியாக மாற்றப்பட்டது. அதற்கு, ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ (பிஆர்எஸ்) என்றும் பெயர் சூட்டப்பட்டது.  2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை வீழத்துவதற்காக, தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற  சந்திரசேகர ராவ் விரும்புகிறார். அதன் முதல் படியாகவே தேசிய கட்சியை தொடங்கி இருக்கிறார்.

ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா பவனில் நடந்த புதிய கட்சி தொடக்க விழாவில், பல்வேறு மாநில கட்சி  தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், சந்திரசேகர ராவின் மகளும், கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான கவிதா பங்கேற்கவில்லை. தேசிய கட்சியின் தொடக்க விழா நடந்து கொண்டிருந்தபோது, கவிதா தனது வீட்டில் தசரா விழாவை கொண்டாடினார். பூஜையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டார். இதனால், புதிய  கட்சி தொடக்க விழாவில் அவர் பங்கேற்காதது, பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. தந்தை – மகள் உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக  கூறப்படுகிறது.  

இது பற்றி கவிதாவிடம் கருத்து கேட்க முயன்றபோது, அவர் பதில் அளிக்காமல் நழுவினார். அதேபோல், சந்திரசேகர ராவ் உட்பட பிஆர்எஸ் கட்சி தலைவர்களும்  கருத்து கூற மறுத்து விட்டனர்.  சந்திரசேகர ராவின் மகனும், மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கே.டி. ராமராவ், விழாவில் பங்கேற்றார். இதன்மூலம், சந்திரசேகர ராவ் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது கண்கூடாக தெரிவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதனால், தெலங்கானாவில் பரபரப்பு நிலவுகிறது.

*தேர்தல் பொறுப்பும் இல்லை
தெலங்கானாவில் காலியாக உள்ள முனுகோடா சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான, கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலிலும் கவிதாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.