1993-ம் ஆண்டு யாஷ் சோப்ராவின் ‘பரம்பரா’ திரைப்படத்தில் அறிமுகமான சைஃப் அலி கான் இன்றுவரை பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். Kya Kehna, Tanhaji, Hum Tum போன்ற பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார். தற்போது ஓம் ராவத் இயக்கத்தில், டி-சீரிஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள`ஆதி புருஷ்’ படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சைஃப் அலி கானின் கனவு கதாபாத்திரம் குறித்துக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் நடிக்க விரும்புவதாகவும், அதுவும் மகாபாரதத்தை ‘Lord of the Rings’ போன்று யாராவது பிரமாண்டமாக எடுத்தால் அதில் நான் கண்டிப்பாக நடிப்பேன்” என்றும் சைஃப் அலி கான் கூறியிருக்கிறார்.
மேலும், 1999-ம் ஆண்டு ‘கச்சே தாகே’ திரைப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் நடிக்கும் போதே இதைப்பற்றி அவருடன் கலந்துரையாடியிருப்பதாகவும் ‘இது எங்கள் தலைமுறையின் கனவுப் படம்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் சினிமாவாக இருந்தாலும் சரி, அல்லது தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும் சரி, இதுபோன்ற ஒரு திட்டத்தில் பணியாற்ற விரும்புகிறேன் என்று பேசியிருக்கிறார்.