பல கடினமான சூழ்நிலைகளில் நோயாளிகளின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினாலும், அவ்வப்போது மருத்துவ அலட்சியங்களால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில், மருத்துவர்களின் அலட்சியத்தால் பாலக்காடு பகுதியில் தாய் மற்றும் சிசு இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரசவவலி உண்டானதை அடுத்து, ஐஸ்வர்யா என்ற பெண் பாலக்காட்டில் உள்ள தங்கம் மருத்துவமனையில் ஜூன் 29-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் சிசேரியன் செய்ய அறிவுறுத்திய மருத்துவர்கள், பின்பு நார்மல் டெலிவெரி முறையில் மருத்துவம் பார்க்க முடிவெடுத்துள்ளனர்.
இதனால் தொப்புள்கொடி குழந்தையை நெரித்ததில், குழந்தை ஜூலை 3-ம் தேதி அன்று இறந்து பிறந்துள்ளது. ஐஸ்வர்யாவுக்கு அதீத ரத்தப்போக்கு உண்டாவதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். என்ன நடப்பதென்றே தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், ஜூலை 4-ம் தேதி ஐஸ்வர்யா மரணமடைந்தார்.
இறந்த குழந்தையை அடக்கம் செய்வதிலும் மருத்துவமனை மும்முரமாகச் செயல்பட்டுள்ளது. மருத்துவமனையின் இத்தகைய செயல்களால் அதிருப்தியடைந்த குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இதைக் குறித்து விசாரிக்க மருத்துவக் குழு ஒன்று ஜூலை மாதத்தில் நியமிக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில், ஐஸ்வர்யாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அலட்சியத்தால், இரு உயிர்கள் பறிபோனது உறுதியானது. மருத்துவக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அழைத்து அவர்களை விசாரணை செய்வார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்னை வெளிவருவதற்கு மருத்துவமனையில், ஜூலை 6-ம் தேதி, 29 வயதான கார்த்திகா என்ற பெண்ணின் மரணமும் காரணம். சிறுவயது முதலே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட இவருக்கு, அறுவை சிகிச்சையின்போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் இருந்து, மருத்துவர்கள் இவரை மீட்கத் தவறியதால் இறந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரள மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்-2018-ன் கீழ், இம்மருத்துவமனையை விசாரிக்க உத்தரவிட்டார். மாநிலத்தில் ஒரு மருத்துவமனையின் மீது இத்தகைய சட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.