மாதம் தோறும் 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்: தூயமைப் பணியாளர்கள் கோரிக்கை

மாதம் தோறும் 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் பணியாளர்கள் விசைப்பம்பு இயக்குநர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (3-ம் தேதி) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 186 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.

தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

இதில், தமிழ்நாடு குடிநீர் பணியாளர்கள், விசைப்பம்பு இயக்குநர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள், ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

குடிநீர் பணியாளர்கள், விசைப்பம்பு இயக்குநர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். டேங்க் சுத்தம் செய்ய ரூ.500, வழங்க வேண்டும்.

2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பணிபுரிந்த கூடுதல் ஆபரேட்டர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலர்களுக்கு ரூ.6 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். 2019-ம் ஆண்டு முதல் 2022 வரை அலுவலகப்படி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.