மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 17,778 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 3 நாட்களாக 16 ஆயிரம் கனஅடியாக நீடித்த நிலையில் இன்று காலை நிலவரப் படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.
மெயினருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, நேற்று முன்தினம் முதல் அருவியின் ஒரு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல்லில் விடுமுறை தினமான நேற்று குவிந்த சுற்றுலாப் பயணிகள், அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15,961 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 16,701 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 17,778 கனஅடியாக அதிகரித் துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 118.70 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 118.80 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 91.44 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 40.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.