சென்னை குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (40), தச்சு தொழிலாளி. இவரின் மகன் நவீன் குமார். நவீன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இவன் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தான். சம்பவத்தன்றும் நவீன் குமார் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அதை சுந்தர் கண்டித்துள்ளார். அதனால் மனமுடைந்த நவீன் குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை நேரில் பார்த்த சுந்தர், கதறி அழுதார். பின்னர் தன்னால் நவீன் குமார் இறந்து விட்டானே என்ற சோகத்தில் மூழ்கிய சுந்தர், மகன் தூக்கில் தொங்க பயன்படுத்திய கயிற்றை எடுத்து தற்கொலை செய்துகொண்டார்.
நவீன் குமாரும் சுந்தரும் தூக்கில் தொங்குவதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரின் சடலங்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார் உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் தந்தையும் மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.