13 தண்டனைகள், 4 இடமாறுதல்கள் பெற்ற காவலரை போக்குவரத்து பிரிவுக்கு மாற்ற உத்தரவு

13 தண்டனைகள், 4 இடமாறுதல்கள் பெற்ற காவலரை தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றாமல் மதுரையில் போக்குவரத்து காவல் பிரிவுக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் ஆர்.ஸ்ரீமுருகன். இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக காவல் துறையில் 2003-ல் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்தேன். 2011-ல் விபத்தில் காயமடைந்தேன். இதனால் மருத்துவ விடுப்பில் சென்றேன். பின்னர் தொடர்ந்து தலைவலி இருந்ததால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் எனக்கு ஊதியக் குறைப்பு, பணிப் பதிவேட்டில் கருப்புப் புள்ளி என 13 தண்டனைகள் வழங்கப்பட்டன.

இவற்றை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். உயர் நீதிமன்றம் எனக்கு அனைத்துக் குற்றச்சாட்டுக்கும் சேர்த்துசிறிய தண்டனை வழங்க உத்தரவிட்டது. அதை அமல்படுத்தாததால் 13 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்தேன். மேலும் 12 ரிட் மனுக்கள் தாக்கல் செய்து நிலுவையில் உள்ளன.

என்னை 18 மாதங்களில் 4 காவல் நிலையங்களுக்கு இட மாறுதல் செய்தனர். என்னுடன் பணியில் சேர்ந்தவர்கள் ரூ.52 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர்.

ஆனால், எனக்கு ரூ.9,317 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. நான் யாரிடமும் லஞ்சம் வாங்காமல் பணிபுரிகிறேன். லஞ்சம் வாங்கும் போலீஸார் அவர்கள் சொல்படிநடக்க என்னை வற்புறுத்துகின்றனர்.

இந்நிலையில் என்னை மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர். அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை நீதிபதி எஸ்.மதி விசாரித்தார். போலீஸ் தரப்பில், ‘மனுதாரர் உயர் அதிகாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுள்ளார். அவர் பணிபுரிந்த காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார்.

அவரது செயல்பாடு காரணமாக அவருக்கு 17 தண்டனைகள் அளிக்கப்பட்டன. மனுதாரர் 329 நாள் சம்பளம் இல்லா விடுமுறை, 258 நாள் மருத்துவ விடுமுறை எடுத்துள்ளார். சீருடைப் பணியில் ஒழுங்கீனமாகச் செயல்பட்டதால் அவர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தன்னை மதுரை மாவட்டத்துக்குள் போக்குவரத்துக் காவல் பிரிவுக்கு இடமாறுதல் செய்ய கோரிக்கை வைத்துள்ளார். மனுதாரர் ஏற்கெனவே தண்டனை அனுபவித்து வருகிறார். குறைந்த சம்பளமே பெறுகிறார். கர்மா அடிப்படையில் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றம் முடிவு செய்கிறது.

மனுதாரரை தூத்துக்குடிக்கு இடமாறுதல் செய்வதால் அவரது நிதி நிலைமை மேலும் மோசமாகும். இதனால், மனுதாரரை மதுரை மாவட்டத்துக்குள் போக்குவரத்து காவல் பிரிவுக்கு மாற்ற வேண்டும். போக்குவரத்து காவல் பிரிவில் மனுதாரர் ஒழுக்கமாகப் பணிபுரிய வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறி யுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.