உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 3 ஆம் தேதி மருத்துவத்துக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு (அக்.4) அறிவிக்கப்பட்டது..பிரான்ஸை சேர்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் எஃப். கிளாசர், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அன்டன் ஜீலிங்கர் ஆகிய விஞ்ஞானிகள் நிகழாண்டுக்கான நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் தகவல் தொழில்நுட்ப அறிவியல் குறித்து இவர்கள் மேற்கொண்ட அற்புதமான ஆராய்ச்சிகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
இதேபோன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்டோஸி,பேரி ஷார்ப்லெஸ், டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மூலக்கூறுகள் ஒருகிணைப்பு மற்றும் உயிரிக்க வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிச அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘L’ Occupation என்ற நூலை எழுதியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.