அக்., 17ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்… ரெடியாகும் எதிர்க்கட்சிகள்!

தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் யாரென்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. எடப்பாடி தரப்பு தனியாக, ஓபிஎஸ் தரப்பு தனியாக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படாமல் இருக்கிறது. எனவே துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அதன்படி செயல்படுத்தப்படும்.

சட்டப்பேரவை கூடும் நாளன்று பாருங்கள். எல்லாம் சரியாக இருக்கும். சபையில் மரபுப்படி இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பதிலளித்தார். தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டு வருவது போதைப் பொருட்கள் புழக்கம்.

இதைக் கட்டுப்படுத்த ஆளுங்கட்சி தவறிவிட்டது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் மாறி, மாறி வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வந்தன. இந்த விவகாரத்தை முக்கியமானதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்ப வாய்ப்புண்டு. இதுதவிர பி.எஃப்.ஐ அமைப்பினர் மீதான ரெய்டு, கைது நடவடிக்கைகள், பெட்ரோல் குண்டு வீச்சு ஆகியவற்றால் தமிழகம் பரபரப்பிற்கு ஆளானது.

இதுபற்றியும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க வாய்ப்புண்டு. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளில் இருக்கும் குறைகள் பற்றியும் பிரச்சினை எழுப்பக்கூடும். இதுதவிர திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத பட்டியலில் இருப்பவை குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்பிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.