சென்னை: இம்மாதம் 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அக்டோபர் 17-ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம், மறைந்த மாமன்ற உறுப்பினர்கள், மறைந்த பிரபலங்கள், இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அன்றையதினம் மறைந்த சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா இறப்பு குறித்தும் சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்பு வைக்கப்பட்டு அன்றைய தினம், சட்டமன்றம் அத்துடன் ஒத்திவைக்கப்படும்.
அதன்பின்னர் எனது அறையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் அமர்ந்து பேசி அலுவல் ஆய்வுக்குழு எத்தனை நாள் சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்பது குறித்தும், அடுத்தநாள், துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அதன்மீது விவாதங்கள் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்” என்று அவர் கூறினார்.
அப்போது அவரிடம் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் உள்பட இரண்டு தரப்பிலும் கடிதங்கள் கொடுத்துள்ளனர். அந்தக் கடிதங்கள் பரிசீலனையில் உள்ளன. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்படும்” என்றார்.