அரசுத் துறை திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய சிறப்புதிட்ட செயலாக்கத் துறை சார்பில்37 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக கள தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணை: அரசின் கொள்கை அறிவிப்புகள் செயல்படுத்தப்படுவதை சம்பந்தப்பட்ட துறைகளின் தரவுகளைப் பெற்று கண்காணிக்கும் பணியை சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் செயல்பாட்டு அறிக்கையை தயாரித்து, அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்துதல், உயர்நிலை சீராய்வு கூட்டங்களுக்கான பகுப்பாய்வு அறிக்கை தயாரித்தல் போன்ற பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, மாவட்ட அளவில் வெவ்வேறு துறைகளின் அலுவலர்களை குறிப்பாக துணை ஆட்சியர், உதவி இயக்குநர்கள் நிலையில் கள அலுவலர்களாக நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இவர்களுக்கு கள தனி அலுவலர்கள் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில் மாதத்தில் குறைந்தபட்சம் 4 நாட்கள் அல்லது அரசு குறிப்பிடும் நாட்கள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசால் குறிப்பிடப்படும் அனைத்து திட்டங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின்போது, பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.
செயல்படுத்தப்படும் திட்டத்தின் தற்போதைய உண்மை நிலை மற்றும் நிகழ்வுகளில் கிடைத்த தகவல்களையும் பரிசோதிப்பார்கள். அரசின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள்படி திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். திட்டத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்ததா, பிரச்சினைகள் உள்ளதா என்பதை அறிந்து, அதை சரி செய்வதற்கான சரியான திட்டத்தையும் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு ஆய்வு முடிந்ததும்,அந்த அறிக்கையை உடனேஅனுப்ப வேண்டும். துறை சார்பில்நடக்கும் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அரசால்அவ்வப்போது வழங்கப்படும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கள தனி அதிகாரிகள் ஆய்வுக்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதோடு அவர்களுக்குத் தேவையான அனைத்து தரவுகள், தகவல்களையும் ஆட்சியர்கள் வழங்க வேண்டும். கள அலுவலர்களை மாற்றுவதற்கும், தேவையான வழிகாட்டுதல்களை அவ்வப்போது வழங்குவதற்கும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அரசு வழிகாட்டுதல்படி திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கள தனி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும். தவறு இருந்தால் அதை சரிசெய்யும் திட்டத்தையும் கூற வேண்டும்.