அரவிந்த்சாமி படம் மீது கதை திருட்டு புகார்
அரவிந்த்சாமி, குஞ்சாகோ போபன், ஈஷா ரெப்பா, நடித்த மலையாள படம் ஒட்டு. இதனை பெல்லி இயக்கி இருந்தார், இதில் அரவிந்த்சாமி நடித்திருப்பதால் இந்த படத்தை தமிழில் டப் செய்து ரெண்டகம் என்ற பெயரில் வெளியிட்டனர். கடந்த வாரம் இந்த படம் வெளியானது. நேற்று (6ம் தேதி) இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை என்னுடையது எனவே படத்தை ஓடிடியில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த படத்தின் கதையை 'ஜாவா' என்ற பெயரில் இயக்குவதற்காக நடிகர் அரவிந்த்சாமியிடம் கதை சொல்லியிருந்தேன். இந்த கதையை பதிவு செய்து அதற்கான காப்புரிமை பெற்ற நிலையில் எனது கதையை தமிழில் 'ரெண்டகம்' என்ற பெயரில் படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். எனவே, இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரெண்டகம் படத்தை ஓடிடி தளத்தில் இந்தியாவில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு தயாரிப்பு நிறுவனம், இயக்குனர், கதாசிரியர், அரவிந்த்சாமி, ஆகியோர் தலா பத்து லட்சம் ரூபாயை வரும் 10ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.