ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இந்த தொடரில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. நிதா தர் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.
இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். இந்திய மகளிர் அணியில் ஸ்மிரிதி மந்தனா (17), மேகனா (15), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2), ஹேமலதா (20), பூஜா (5), தீப்தி ஷர்மா(16), ஹர்மன்ப்ரீத் கௌர் (12), ராதா யாதவ் (3) என அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி நம்பிக்கை அளித்த ரிச்சா கோஷ் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். 19.4 ஓவரில் 124 ரன்களுக்கு இந்திய மகளிர் அணி ஆல் அவுட்டாகி 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மகளிர் அணிக்கு எதிராக மூன்றாவது வெற்றியை பாகிஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.
ஆடவர் கிரிக்கெட்டில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில், மகளிர் அணியும் தோல்வியடைந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM