புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதனை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் என்னென்ன தகவல்களை பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அனைவரும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
கடந்த செப்டம்பர் 29-ம் தேதி இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குடிமை பணிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வருபவர்களுக்கு இந்த செயலி பெரிதும் உதவும் என கூறப்படுகிறது.
இந்த செயலியின் மூலம் மொபைல் ஃபோன் பயனர்கள், தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம். தேர்வு தேதி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகள், அறிவிப்புகள், தேர்வு முடிவுகள் போன்ற பயனுள்ள தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எனினும், இதன் மூலம் பயனர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை மூலம் இதனை தெரிவித்துள்ளது. இந்த செயலியை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து, பயன்படுத்தி வரும் பயனர்கள் கலவையான விமர்சனங்களை வழங்கி உள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மினி வெர்ஷன் இது. இதனை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என சிலர் தெரிவித்துள்ளனர். இந்த செயலிக்கு கூகுள் பிளே ஸ்டோரில் 4.7 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.