சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான ட்வீட்டை சென்னை போக்குவரத்துக் காவல் துறை ரீ-ட்வீட் செய்தது, நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அந்த ட்வீட் நீக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அளிக்கக் கூடாது என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் கடந்த 5-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும், அதன் ஆதரவாளர்களும் பகிர்ந்து வருகின்றனர்.
இதைப்போன்று காஷ்மீரி இந்து எனும் ட்விட்டர் பக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலம் தொடர்பான வீடியோ பதிவிட்டு இருந்தது. இந்த ட்வீட்டை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கம் ரி-ட்வீட் செய்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு தரப்பினர் காவல் துறையின் இந்தச் செயலை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ரி-ட்வீட்டை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை நீக்கியது.