புதன்கிழமை மாலை லண்டனில் `ஐரோப்பாவின் நவராத்திரி விழா’ கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இங்கிலாந்தின் எதிர்கட்சித் தலைவரும், தொழிலாளர் கட்சியின் தலைவருமான கெய்ர் ஸ்டார்மர், “இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து லெய்செஸ்டர் மற்றும் பர்மிங்காமில் வகுப்புவாத மோதல்கள் நடந்திருக்கின்றன. எனவே, வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராகப் போராட இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தன்னை அர்ப்பணித்திருக்கிறது.
பிளவு அரசியலுக்கு, இந்துபோபியாவுக்கு நம் சமூகத்தில் எங்கும் இடமில்லை, நாம் அனைவரும் சேர்ந்து இதை எதிர்த்துப் போராட வேண்டும். பலர் தங்கள் மதத்தின் அடிப்படையில் குறிவைக்கப்படுகிறார்கள். சமீப ஆண்டுகளில் வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருவதையும் நான் அறிவேன். பிரிவினைவாத அரசியலால் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகளால் வன்முறை மற்றும் வெறுப்பைப் பரப்புவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒன்றாக உறுதியாக நிற்க வேண்டும்.
நமது குறைகளைப் பயன்படுத்திக் கொள்ள தீவிர வலதுசாரி முயற்சிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நமது மதம், இடங்கள் மற்றும் வழிபாட்டுச் சின்னங்கள் மதிக்கப்பட வேண்டும். தொழிலாளர் அரசாங்கம் மக்களை மீண்டும் ஒன்றிணைத்து இந்தப் பிளவு அரசியலுக்கு முடிவு கட்டும்.
விஜயதசமி கொண்டாட்டங்களில் உங்களுடன் கலந்துகொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். உலகம் முழுவதும் உள்ள ராவணனின் உருவ பொம்மைகளை எரிக்கும் தீ, நம் சமூகத்தை எதிர்கொண்டிருக்கும் தீமைகளை – வறுமை, அநீதி, வெறுப்புகளை தோற்கடிக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது. பிரிட்டனுக்கு நீங்கள் செய்த பங்களிப்புக்காக இந்து சமூகத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.