லண்டன்: பிரிட்டனில் இந்துஃபோபியாவுக்கு இடமில்லை என்று பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் கேர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய நவராத்திரி விழாவாக அறியப்படும் லண்டன் நவராத்திரி விழாவில் லேபர் கட்சித் தலைவர் உரையாற்றினார். விழாவில் நூற்றுக்கணக்கான பிரிட்டன் வாழ் இந்தியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய கேர் ஸ்டார்மர், “நம் நாட்டில் நிறைய பேர் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சமீப ஆண்டுகளாக வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு நடக்கும் பிரிவினை அரசியல் சோர்வைத் தெருகிறது. மேலும் மிகுந்த வருத்தத்தையும் தருகிறது. அண்மையில் லீசெஸ்டர் மற்றும் பர்மிங்ஹாமில் நடந்த சம்பவங்கள் வருத்தமளித்தது. வெறுப்பை விதைத்துப் பரப்பும் எல்லா முயற்சிகளுக்கும் எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். துயரங்களை அரசியலாக்கும் வலது சாரிகளை விலக்கிவைக்க வேண்டும். நம்மை பிரிக்கும் அம்சங்களைவிட இணைக்கும் அம்சங்கள் நிறைய இருக்கின்றன. நமது மதம், வழிபாட்டுத் தலங்கள், மத அடையாளங்கள் என அனைத்தும் மதிக்கப்பட வேண்டும். அதற்கு பிரிட்டனில் லேபர் கட்சி ஆட்சி அமைய வேண்டும். அது மக்களை இணைக்கும். பிரிவினை அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும்” என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் கேர் ஸ்டார்மர், தனது கட்சியின் ஜெரமி கார்பின் இந்தியர்களுக்கு சாதகமற்றவராக இருந்தார் என்ற நிலையை மாற்ற முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நிகழ்ச்சியில் பேச்சை முடிக்கும்போது, “இந்த விஜயதசமி விழாவில் உங்களுடன் இணைவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. உலகம் முழுவதும் ராவணனை எரிக்கும் நெருப்பு பிரிட்டன் சமூகம் எதிர்கொண்டுள்ள தீமையை அழிக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. நம் சமூகத்தில் நிலவும் வறுமை, அநீதி, வெறுப்பு, தீய பழக்கங்கள் அனைத்தையும் ஒழிக்க வேண்டிய நேரமிது” என்று கேர் ஸ்டார்மர் கூறினார்.