தென்மேற்கு பருவமழை இன்னும் விலகாத நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதியில் கடந்த சில நாள்களாக நல்ல மழைப் பொழிவு பதிவாகி வருகிறது.
இந்நிலையில் அடுத்த இரு தினங்கள் வானிலை எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
வட தமிழகத்தில் அடுத்த இரு தினங்கள் நல்ல மழைப் பொழிவு இருக்கும். இன்று காலையே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 10 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் பகல் பொழுதில் மழை குறைந்தாலும் அடுத்த இரு தினங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் இரவு முதல் காலை வரை கனமழை பதிவாகும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று காலை நிலவரப்படி கத்திவாக்கம் 12 செ.மீ, புழல் 7 செ.மீ, திருவொற்றியூர் 6 செ.மீ, மணலி 4 செ.மீ, பாரீஸ் 4 செ.மீ, தண்டையார் பேட்டை 3 செ.மீ, பெரம்பூர் 2 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் அடுத்த இரு தினங்களில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் அதாவது அக்டோபர் 15க்கு முன்னர் மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் வலியுறுத்தி வரும் நிலையில் பல இடங்களில் பணிகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளது.
குழிகள் வெட்டப்பட்ட நிலையில் உள்ள இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் சாலை எது, பள்ளம் எது என்றே தெரியாத சூழல் சில இடங்களில் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.