டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம் லால்தாங் என்ற இடத்திலிருந்து திருமண விருந்தினர்களுடன் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்தப் பேருந்து பவுரி கார்வால் மாவட்டம், திமரி என்ற கிராமத்தில் வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து 500 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்த மாநில போலீ ஸார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றுமீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமுற்றவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலை யில் இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகி றது. கடந்த ஜூன் மாதம் டேராடூன் யமுனா கோயிலுக்கு செல்லும் வழியில் பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் மலையேற்ற வீரர்கள் நேற்று முன்தினம் பனிச்சரிவில் சிக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.