புதுடெல்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ், உயிர் காக்கும் மருந்துகளுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், கடந்த 2-ம் தேதி அன்று தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர்காக்கும் மருந்துகளுடன், மருத்துவ நிபுணர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முலாயம் சிங்கின் மனைவி சாதனா குப்தா நுரையீரல் தொற்று காரணமாக, குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த ஜூலை மாதம் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முலாயம் சிங் யாதவ் குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள முலாயம் சிங் யாதவை, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கவனித்து வருகிறார். இந்நிலையில் ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் நேற்று அகிலேஷை சந்தித்து முலாயம் சிங்கின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
உ.பி. முதல்வராக 3 முறை பதவி வகித்தார் முலாயம் சிங் யாதவ். மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இவர் இருந்தார். உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு இவர் 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, இவர் உத்தர பிரதேசம் மைன்பூரி மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் ஏழாவது முறையாக எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.