புவனேஸ்வர்,
ஒடிசா கடற்கரையில் உள்ள நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகில் திடீரென தீப்பிடித்தது. படகில் இருந்த மீனவர்கள் 10 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.
ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா பகுதியில் உள்ள தோசிங்கா கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென படகில் தீப்பிடித்தது. வீலர்ஸ் தீவு அருகே சென்றபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீப்பிடித்த படகில் இருந்த மீனவர்களை அருகில் இருந்த மற்றொரு மீன்பிடி படகு மீட்டது. இதையடுத்து கடலோர காவல் படையினர் மற்றும் கடற்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 10 மீனவர்களை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. என்ஜின் அருகே தீப்பிழம்பு வெளிப்பட்டதாக, மீட்கப்பட்ட மீனவர்களில் ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.