ஒட்டன்சத்திரம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு: நாளை நடக்கிறது

ஒட்டன்சத்திரம்: உலக வலசை பறவைகள் தினத்தை முன்னிட்டு, கான்செர்விநேச்சர் இணையதளம் சார்பில் நாளை உலகளாவிய பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவை ஆர்வலர்கள், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் பறவைகளின் எண்ணிக்கை, பரவல், வலசை, இவற்றில் ஆண்டுதோறும்  பறவைகள் அடைந்து வரும் மாற்றங்கள், வாழிட சிக்கல்கள், அழிவின் விளிம்பு நிலையில் இருக்கும் பறவைகளை கண்டறிதல், அவற்றை பாதுகாத்தல் என கணக்கிடப்பட உள்ளது.

மேலும் பறவைகளால் உண்டாகும் பல்வேறு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை கொண்டு காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்க உள்ளனர். இந்த பணிகளுக்காக மக்கள் அறிவியல் திட்டங்களின் வழியாக உலகம் முழுவதும் உள்ள சூழலியல் ஆர்வலர்களை இ.பேர்ட் நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. இந்த ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் நாளை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து அனதர் பேஜ் பார் பீப்பிள் சொசைட்டியும் இந்த பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்கிறது.

ஒட்டன்சத்திரத்தில் தொடங்கி பரப்பலாறு அணை, பாச்சலூர், தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதி, பெருமாள்மலை, தென்மலை மற்றும் பழனி தேக்கந்தோட்டம் பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. மேலும் பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை உள்ள  ஆறுகள், குளங்கள், புல்வெளிப் பகுதிகள், குட்டைகள் வரை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இது குறித்து அனதர் பேஜ் பார் பீப்பிள் சொசைட்டியின் இயக்குனர்கள் குமார் மற்றும் முத்துலட்சுமி கூறுகையில், ‘‘பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்வது உற்சாகத்தையும், பரவசத்தையும் தருவதோடு மட்டுமின்றி, இயற்கைப் பாதுகாப்பில் நாமும் சிறு பங்களிப்பு செய்தோம் என்கிற மகிழ்ச்சி ஏற்படும். விருப்பமுள்ளவர்கள் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.