சேலம் தாதகாப்பட்டி குமரன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் சேலத்தை மையமாகக் கொண்டு `ஜஸ்ட் வின்’ எனும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாமக்கல் என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆட்களைச் சேர்த்து ரூபாய் ஐநூறு கோடிக்கு மேலாக நிதி திரட்டி நிறுவனத்தை இயக்கி வந்திருக்கிறார். மேலும் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதாந்தோறும் 20 ஆயிரம் 12 மாதங்களுக்கு தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை திரட்டியிருக்கிறார். இதனை நம்பி பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பணம் செலுத்தியவர்களுக்கு எந்தவிதத் தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார். இதற்கிடையில் பாலசுப்பிரமணியன் பா.ஜ.க-வில் இணைந்தார்.
இந்தச் சூழலில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயராஜ் என்பவர் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ஜஸ்ட் வின் நிறுவனத்தில் இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு செலுத்திய தன்னை ஏமாற்றி விட்டதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சம்பந்தப்பட்ட ஜஸ்ட் வின் நிறுவனத்தை முற்றுகையிட்டு 50-க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சேலம், அழகாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, பாலசுப்பிரமணியமும் அவர் கூட்டாளிகளும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சம்பந்தப்பட்ட ஜஸ்ட் வின் நிறுவனத்துக்குச் சொந்தமான 9 அலுவலகங்கள், 3 வீடுகளில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதில் ஆறு கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமரா பதிவுகள், பீரோவிலிருந்து பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.