டெல்லி: ராகுல் காந்தியுடன் இணைந்து ஒற்றுமை இந்தியா நடைப்பயணம் மேற்கொண்டிருந்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அழைத்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து கடந்த சில நாட்களாக ராகுல் காந்தியுடன் இணைந்திருந்த டி.கே.விவக்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கு பதில் அனுப்பிய டி.கே.சிவகுமார், நடைபயணத்தை ஒருங்கிணைக்கும் பணியில் இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அவரது வேண்டுகோளை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை அக்.7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து நடைபயணத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறிய டி.கே.சிவகுமார், டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றப்பட்டதில் நிதி முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு டி.கே.சிவகுமார் அழைக்கப்பட்டுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட்டு வெற்றி பெற செய்யும் முயற்சிகளில் டி.கே.சிவகுமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அவரது முயற்சியை முடக்கும் வகையில் அமலாக்கத்துறை வேண்டும் என்றே விசாரணைக்கு அழைத்து அவரை அலைக்கழிப்பதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 19ம் தேதி அன்று மற்றோரு வழக்கில் டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.