தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு -அமெரிக்கா கடும் கண்டனம்!

வாஷிங்டன்,

தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது.

இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

இந்த பயங்கர சம்பவத்தில், 38 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர் குழந்தைகள் என்பது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. எஞ்சிய 11 பேர் பராமரிப்பாளர்கள், ஊழியர்கள் ஆவார்கள்.

இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறைகளையும் தாய்லாந்து பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.இந்த சம்பவம் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த கொடூர சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவேன் வெளியிட்ட அறிக்கையில்,

இந்த கொடூர சம்பவத்தால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சம்பவம் இடத்திலிருந்து வெளியான படங்கள் நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளியான தாய்லாந்திற்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தி, 35 பேரை கொன்று குவித்ததுடன், தனது மனைவி, மகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது.அவர், பன்யா காம்ரப் (வயது 34) என்பவர் ஆவார். அவர், நா வாங் போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றியவர்.இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.